சுற்றுலா வேன் 100 அடி பள்ளத்தில் பாய்ந்ததால் 17 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு கேரள மாநிலத்தில் இருந்து 17 பேர் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக வேனில் சென்றுள்ளனர். இந்த வேனை அப்சல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கொடைக்கானல்-பழனி மலை பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது.
அப்போது வேனில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். தற்போது படுகாயமடைந்த 17 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வேனை அப்புறப்படுத்தியுள்ளனர்.