வேன் மோதியதில் 2 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வளையபாளையம் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் தனது மொபட்டில் காட்டூர் ரோடு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது பொங்கலூர் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது உடுமலையிலிருந்து காங்கேயம் நோக்கி தேங்காய் மட்டைகளை ஏற்றி வந்த வேன் இவர் மீது மோதியது. அதன்பின் அந்த வேன் சாலையின் எதிர்புறத்தில் பாய்ந்து சின்னக்காட்ட்டூர் பகுதியில் வசிக்கும் விவசாயி கனகராஜ் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் அவிநாசிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரின் உடலை உடனடியாக கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வேனை ஓட்டிவந்த உடுமலை பகுதியில் வசிக்கும் பிரகாஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.