வேன் ஸ்கூட்டர் மீது கவிழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேலம்பட்டி பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மயில்சாமி கல்லூரியில் படிக்கும் தனது மகனை அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் பேருந்தில் ஏற்றி விட அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மகனை அனுப்பி வைத்துவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நூல் ஏற்றிக்கொண்டு வந்த வேன் வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக மயில்சாமியின் ஸ்கூட்டர் மீது கவிழ்ந்தது.
இதில் மயில்சாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவினாசிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயில்சாமியின் உடலை உடனடியாக கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.