வனப்பகுதியில் மெக்கானிக் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் யுவராஜ் வேலைப் பார்க்கும் கடையில் கணவாய் புதூர் பகுதியில் வசிக்கும் திருமலை என்பவரும் வேலை செய்து வந்திருக்கிறார். அதன்பின் நண்பர்களான இருவரும் வாணியம்பாடி அருகில் இருக்கும் பாலாறு புல்லூர் தடுப்பணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
இதில் திருமலை மட்டும் வீடு திரும்பியதாகவும், யுவராஜ் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த யுவராஜ் குடும்பத்தினர் பல இடங்களில் அவரை தேடிப் பார்த்துள்ளனர். இதனையடுத்து யுவராஜ் நண்பரான திருமலையிடம் கேட்ட போது எந்த தகவலும் கிடைக்காததால் யுவராஜின் தந்தை கோபால் ஆந்திர மாநிலம் குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து புல்லூர் தடுப்பணை அருகில் இருக்கும் வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில் இறந்து கிடந்தது யுவராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், அவரை யாரோ அடித்து கொலை செய்து உடலை வனப்பகுதியில் விசி சென்றிருப்பதாகவும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து யுவராஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.