இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பாரதப்பிரதமர் வருகின்ற ஜனவரி 12-ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக வருகை தருகிறார். அதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார் என்று கூறியுள்ளார்.
மேலும் திமுக கட்சியினர் கடந்த காலத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடியை “கோ பேக் மோடி” என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த முறை அவ்வாறு அவர்களால் செய்ய முடியாது. ஏனென்றால் பிரதமர் மோடி தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக வருகை தருகிறார்.
இதற்கு முன்பு ஒருமுறை திமுகவினர் ஆயுத தளவாட கண்காட்சியைத் திறந்து வைப்பதற்காக தமிழகம் வந்த மோடியை “கோ பேக் மோடி” என்று கூறினார்கள். ஆனால் அந்த திட்டத்தின் மூலம் தான் தமிழகத்திற்கு ரூ.2,000 கோடி முதலீடு நடந்திருப்பதாக நிதியமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். எனவே “கோ பேக் மோடி” என்று சொன்னாலும் கூட தமிழகத்திற்கு அந்தத் திட்டத்தில் இருந்து தான் ரூ.2,000 கோடி முதலீடு இன்று கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.