நீட் தேர்விற்கு எதிரான தீர்மானம் குறித்த கூட்டத்திலிருந்து, பாஜக சார்பில் பங்கேற்ற வானதி வெளிநடப்பு செய்தார்.
இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த ஐந்தாம் தேதி அன்று, தொடங்கியது. இக்கூட்டத்தின் இரண்டாம் நாளில் நீட் தேர்வை விலக்குவதற்கான அரசின் நிலை தொடர்பில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் நம் போராட்டம் சிறிதளவும் பின்வாங்காமல் முன்னோக்கி செல்லவேண்டும்.
இதற்கான, நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நாளை மறுநாள் கூட்ட தீர்மானித்திருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தின் படி, நீட் தேர்வை எதிர்த்து சமூகநீதிக்கான நம் போராட்டம் தொடரவேண்டும் என்று தெரிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
அதற்குப் பிறகு அதிமுக உறுப்பினரான வைத்தியலிங்கம் பேசியபோது, நீட் தேர்விற்கு விலக்குக் கோரும் அரசுக்கு என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்று கூறியிருக்கிறார். எனவே, அனைத்து கட்சிகளும் ஒரு அணியில் இணைந்து கொண்டது. எனினும், பாஜக மட்டும் எதுவும் கூறாமல் இருந்தது.
ஆனால், பாஜக சார்பாக வானதி சீனிவாசன் பங்கேற்று நீட் தேர்வை ஆதரித்து பேசுவார் என்று தமிழ்நாட்டின் பாஜக தலைவரான அண்ணாமலை தெரிவித்தார். அவர் கூறியது போன்று, இன்று அவர் பங்கேற்றார். எனினும் உடனே கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டார். அதற்குப்பின் பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, “நீட் தேர்வு குறித்து அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் பாஜக மாநிலத்தின் தலைவர் அண்ணாமலை கூறியதற்காக, பாஜக சார்பாக பங்கேற்று எங்களின் நிலைப்பாட்டை கூறினேன். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் இந்த தீர்மானத்தில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது” என்று கூறியிருக்கிறார். மேலும், நீட் தேர்வின் வரலாறு அவர்களுக்கு தெரியவில்லை. அது வருடக்கணக்காக விவாதம் செய்யப்பட்ட ஒன்று என்றும் கூறியிருக்கிறார்.