கோவில்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் போலீசார் 10 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள குல்னா மாவட்டத்தில் ஷியாலி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று அப்பகுதியில் வசிக்கும் இந்து மற்றும் முஸ்லீம் பிரிவினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் முற்றி மோதல் உருவாகியது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று அதில் ஒரு பிரிவினர் ஷியாலி பகுதியில் இருக்கும் கோவில் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் கோவில் சிலைகள் சேதம் அடைந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் புர்பாரா பகுதியில் உள்ள விஷ்ணு மற்றும் துர்கா கோவில்களையும் சேதப்படுத்தி உள்ளதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் இருக்கும் கடைகள், வீடுகள் போன்றவற்றையும் அடித்து நொறுக்கியதாகவும் தகவல்கள் வெளியானது. இதுவரை நான்கு கோவில்களில் பத்துக்கும் மேற்பட்ட சிலைகளை சேதப்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த மோதலினால் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதற்காக கூடுதல் காவலர்கள் களம் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.