வங்கி கணக்கில் இருந்து 54,999 ரூபாய் மாயமான சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் ஆன்லைனில் ஒரு நிறுவனத்தின் பெயரில் வந்த விளம்பரத்தை பார்த்து உடைகள் வாங்குவதற்காக 420 ரூபாய் போன் பே மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் அந்த நிறுவனத்திலிருந்து எந்த உடைகளும் வராத காரணத்தினால் விளம்பரத்தில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது போனில் பேசிய மர்ம நபர் மணிகண்டனிடம் உரிய விளக்கத்தை கேட்டுக் கொண்டு இது பற்றி ஆய்வு செய்து கூறுவதாக போனை துண்டித்துள்ளார். இதனையடுத்து சில வினாடிகளில் மணிகண்டனின் வங்கிக் கணக்கில் இருந்து 54,999 ரூபாய் மாயமானதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் மணிகண்டன் பணம் மாயமானது பற்றி சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.