வங்கி காசாளர் வீட்டில் திருடிய 2 மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் அலி அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் வங்கியில் காசாளராக பணி புரியும் தில்ஷாத் பேகம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் இவரது வீட்டுக்குள் நுழைந்து 8 பவுன் நகைகளை திருடியுள்ளனர். இதுகுறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் தில்ஷாத் பேகம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருடுபோன பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக சென்ற 2 மர்ம நபர்கள் தில்ஷாத் பேகம் வீட்டில் திருடிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அந்த இரண்டு நபர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் பகுதியில் வசிக்கும் மகேந்திரன் மற்றும் மல்லிகார்ஜூன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்த 8 பவுன் நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.