பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “வன்னியர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு இப்போது வன்னியர்கள் வெல்லக்கட்டியாக இனிக்கிறார்கள் போலிருக்கிறது.வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை திமுக தான் வழங்கியதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப் போவதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். 1989ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கு திமுக அரசு இடஒதுக்கீட்டை எளிதாக தூக்கிக் கொடுத்து விடவில்லை. 1980ஆம் ஆண்டில் வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து 9 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி, தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது 21பேரின் உயிரைத் தியாகம் செய்து பெற்றது தான் 20% இட ஒதுக்கீடு ஆகும்.
1989ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு ஏற்படுத்தப்பட்ட பிறகு தனி ஒதுக்கீடு கேட்டு பாமக போராடி வந்தது. 30 ஆண்டுகளாக அந்தப் போராட்டம் தொடருகிறது. அதன்பின் 12 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்க திமுகவுக்கு மனம் வரவில்லை. 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்கலாம் என்று ஆணையிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துமாறு 28.10.2010 அன்று அப்போதைய முதலமைச்சர் கலைஞரை 27 சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து வலியுறுத்தினேன்.
ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அவர் நடத்தவில்லை. காரணம், அத்தகைய கணக்கெடுப்பை நடத்தினால் வன்னியர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் தான். அதுமட்டுமின்றி, 30.07.2010 அன்று முரசொலியில் எழுதிய கடிதத்தில், வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று வெளிப்படையாகவே கலைஞர் அறிவித்தார்.
1989 முதல் 2013 வரை மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக மொத்தம் 22 அமைச்சர் பதவிகளைப் பெற்றது. அவற்றில் வெறும் இரண்டு பதவிகள் மட்டுமே 20 விழுக்காடு மக்கள் தொகைக் கொண்ட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திண்டிவனம் வெங்கட்ராமன், அரக்கோணம் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஆனால், மக்கள்தொகையில் 0.01 விழுக்காடு கூட இல்லாத ஸ்டாலினின் சமுதாயத்திற்கு ஆறு அமைச்சர் பதவிகள், அதுவும் கேபினட் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. திமுகவுக்கு உயிர் கொடுத்த வன்னியர்களுக்கு திமுகவில் இவ்வளவு தான் மரியாதை.
1996ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 23 ஆண்டுகளாக ‘ஏ.ஜி’ அவர்களின் குடும்பத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பே தராமல் ஒதுக்கி வைத்திருந்ததற்கு காரணம் வன்னியர்கள் மீதான ஸ்டாலினின் வெறுப்புணர்வு என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?. 1952-ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலில் இதே விக்கிரவாண்டி தொகுதியில் தானே ‘ஏ.ஜி’ அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கொடுத்த உதயசூரியன் சின்னத்தில் தானே மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், மேயராகவும், அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் ஆனார். அந்த நன்றிக் கடனுக்காகவாவது ‘ஏ.ஜி’ அவர்களின் புதல்வருக்கு ஸ்டாலின் வாய்ப்பளித்திருக்க வேண்டாமா?
ஒரு கட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில் திமுகவை வழிநடத்தும் பொறுப்பை வன்னியரான ‘ஏ.ஜி’ அவர்களிடம் பேரறிஞர் அண்ணா ஒப்படைத்தார். ஆனால், 1969ஆம் ஆண்டில் திமுக தலைவராக கலைஞர் பொறுப்பேற்ற பிறகு இன்று வரையிலான 50 ஆண்டுகளில் திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் எத்தனை வன்னியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஸ்டாலின் அவர்கள், இப்போது திடீரென தம்மை வன்னியர்களின் தோழன் என்று கூறிக் கொண்டால் அதை நம்பி ஏமாற வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல. தேர்தலின் போது கொண்டாடவும், தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிவதற்கும் வன்னியர்கள் கறிவேப்பிலையும் அல்ல என்பதை காலமும், மக்கள் தீர்ப்பும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உணர்த்தும்.தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தச் செய்வதன் மூலம் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை 2021 தேர்தலுக்கு முன்பாகவே வென்றெடுக்கும் சக்தி பா.ம.க.வுக்கு உண்டு.மற்றபடி, 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது’ என தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.