வந்தே பாரத் திட்டம் மூலம் இதுவரை 8.78 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று கட்டத்திட்டங்கள் முடித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகளில் இருந்த இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மூன்று கட்ட வந்தே பாரத் முடிந்து நான்காவது கட்டம் நடந்து வரும் நிலையில் இதுவரை 8 லட்சத்து 78 ஆயிரத்து 921 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே நேபாளம், பூடான், மியான்மர், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் நில எல்லை வழியாக ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 452 இந்தியர்கள் தாயகம் வந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்தாவது கட்ட வந்தே பாரத் மிஷின் இன்று தொடங்குகிறது. இதில் 23 நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர 792 விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுதவிர கடல் மார்க்கமாக சமுத்திரத் சேதி திட்டமும் செயல்படுத்தப்பட்டு இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.