ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட வான் தாக்குதலில் தலிபான் பயங்கரவாத தளபதி உட்பட நான்கு பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசிற்கும் இடையே உருவாகியுள்ள உள்நாட்டுப் போர் மிகவும் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. இராணுவ முகாம்கள் மற்றும் காவல்நிலையங்கள் ஆகியவற்றை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு ஆகிய சம்பவங்களை நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில் நாடு முழுவதும் உள்ள தலிபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அந்நாட்டின் ராணுவம் வான் வழியாகவும் மற்றும் தரை வழியாகவும் பல்வேறு அதிரடி தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் இருக்கின்ற பர்யாப் மாகாணம் தவ்லத் அபாத் மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான மலாவி ஷாபி தனது குழுவினருடன் சேர்ந்து பயங்கரவாத தாக்குதல் பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக இராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு சொந்தமான போர் விமானங்கள் உடனடியாக தவ்லத் அபாத் மாவட்டத்திற்கு விரைந்து சென்று பயங்கரவாதிகள் திரண்டிருந்த பகுதிகளில் குண்டு மழை பொழிந்தது. இந்த தாக்குதலில் மலாவி ஷாபி உள்ளிட்ட 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதே சமயத்தில் ஆயுதங்கள் நிரப்பப்பட்டு இருந்த பயங்கரவாதிகளின் வாகனங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. ஆப்கானிஸ்தான் ராணுவம் இத்தகைய தகவலை வெளியிட்டுள்ளது.