அரசு ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி அருகே விளாங்குளம் கிராமத்தில் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிராம நிர்வாக உதவி ஆய்வாளராக பணிபுரிந்த பூமிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காட்டாற்றில் சட்டவிரோதமாக மணல் எடுத்தவர்கள் மீது வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். இதனால் பூமிநாதனுக்கும் பட்டங்காட்டை பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு பூமி நாதனை பழிவாங்குவதற்காக ஐயப்பன், சந்திரபோஸ், அண்ணாமலை, அல்லிராணி மற்றும் அவருடைய தம்பி சீனிவாசன் ஆகிய 5 பேர் சேர்ந்து பூமிநாதனை கொடூரமான முறையில் அடித்து கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக பேராவூரணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஏஓ-வை கொலை செய்த 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்டம் முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிகள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததோடு, தலா 15,000 அபராதமும் விதித்தார்.