பட்டப்பகலில் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திரியாலம் டி.வீரப்பள்ளி பகுதியில் வெங்கடேசன்-ரோஜா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தில் குடும்பத்துடன் வேலை செய்துகொண்டு இருந்துள்ளனர். எனவே அருகில் வேலை இருப்பதனால் யாரும் வர மாட்டார்கள் என எண்ணி அவர்கள் வீட்டைப் பூட்டாமல் இருந்துள்ளனர்.
ஆனால் மர்ம நபர்கள் யாரோ பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பின் ரோஜா தனது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டில் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ரோஜா கொடுத்த புகாரின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.