போரின்போது புதைக்கப்பட்ட கண்ணிவெடியில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் வரைபடத்தை ஒப்படைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கிடையே கடந்தாண்டு 6 வாரங்களாக போர் நடைபெற்றது. அப்போது அர்மீனியா தன்னுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் நாக்ரோனா-கராபாக் மகாணத்தின் பல பகுதிகளில் கண்ணிவெடியை புதைத்து வைத்துள்ளது. அந்த கண்ணிவெடியில் அசர்பைஜான் வீரர்கள் பலரும் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதன்பின் அசர்பைஜான், அர்மீனியாவினுடைய கட்டுப்பாட்டிலிருந்த நாக்ரோனா கராபாக் மகாணத்தை கைப்பற்றியது. மேலும் இந்தப் போரில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன்பின் இதில் ரஷ்யா தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில் அசர்பைஜான் போரில் கைப்பற்றிய நாக்ரோனா கராபாக் மாகாணத்திலிருக்கும் ஹால் பஜார் மாவட்டத்தில் திடீரென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது போரின்போது அர்மீனிய வீரர்களால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடியின் மீது வாகனம் சற்றும் எதிர்பாராதவிதமாக ஏறியது. இதனால் வாகனம் வெடித்து சிதறிய நிலையில், அதிலிருந்த 2 பத்திரிகையாளர்கள் மற்றும் 1 அதிகாரி என மொத்தமாக 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து 4 பேர் படுகாயமடைந்ததால் அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அசர்பைஜான் போரில் கண்ணிவெடி புதைக்கப்பட்ட வரைபடத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு அர்மீனியாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அர்மீனியா அந்த கோரிக்கையை நிராகரித்து வருகிறது.