வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக 7 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலவஸ்தாசாவடியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு, உதயா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் தரணிதரன் என்ற மகன் இருக்கிறான். இதனையடுத்து திருமணமான சில மாதங்களில் முத்துக்குமார் வெளிநாட்டிற்கு பணிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உதயாவிடம் வரதட்சணை கேட்டு முத்துக்குமாரின் குடும்பத்தினர் அவரை அடித்து துன்புறுத்தினர். இதன் காரணமாக கோபித்து கொண்ட உதயா அவரின் தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தார். அதன்பின் உதயாவின் தந்தை சந்திரசேகர் தனது மகளை மீண்டும் முத்துக்குமாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
இதனைதொடர்ந்து மீண்டும் முத்துக்குமார் குடும்பத்தினர் உதயாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் மனமுடைந்த அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த உதயாவின் தந்தை சந்திரசேகர் மகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் உதயாவின் கணவர் முத்துக்குமார் வெளிநாட்டிலிருந்து கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் முத்துக்குமார் மறுபடியும் தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்தார்.
இதில் 7 மாதம் கர்ப்பமாக இருந்த உதயாவை மீண்டும் கணவர் முத்துக்குமார் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த உதயா கடந்த 9-ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். அதன்பின் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சந்திரசேகர் தஞ்சை தமிழ்பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உதயாவின் கணவர் முத்துக்குமார், மாமனார் மனோகர் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.