பல்வேறு மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தற்போது காணொலிக் காட்சி மூலமாக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் அல்லது ஏதேனும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று நிறைய மாநில முதல்வர்கள் பல்வேறு ஆலோசனைகளை கூறிவருகிறார்கள். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் சார்பாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.
மேலும் இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று டெல்லி மாநில முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். ரேபிட் டெஸ்ட் போன்ற கருவிகள் முழுமையாகக் கிடைக்காததால் கொரோனா பரிசோதனை செய்ய முடியவில்லை என பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநில முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி எதற்காக இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ச்சியாக பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்த மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த வகையில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது போன்ற விஷயங்களை பிரதமர் கேட்டிருக்கிறார். பஞ்சாப் மாநில முதல்வர், அறுவடை சமயத்தில் விவசாய கூலியாட்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். எனவே இப்படியான சூழலில் இறுதி முடிவெடுக்க வேண்டியது பிரதமர் கையில்தான் இருக்கிறது. முன்னதாக பஞ்சாப், ஒடிசா அரசுகள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.