உத்திரபிரதேச அரசு வழிகாட்டுதலின்படி 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 19ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவியதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை விடப்பட்டது. கொரோனா இன்னும் குறையாத காரணத்தால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடைபெறுகிறது.
ஊரடங்கு தளர்வுகளில் அடிப்படையில் பாதுகாப்பு நடைமுறைகள் உடன் பள்ளிகளை திறக்கலாம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகளை யொட்டி உத்தரபிரதேசத்தில் 6 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பின்னர் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 19ஆம் தேதி முதல் பள்ளிகளில் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயமாக அரசின் சுகாதாரம் நடவடிக்கையை பின்பற்ற வேண்டும், மாணவர்கள் மத்தியில் சமூக இடைவெளியை நிலை நிறுத்துவதற்காகவும் வகுப்புகள் இரண்டு ஷிப்டுகளில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை என்றும் பெற்றோர்கள் பாதுகாவலர்கள் இடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.