நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மாநிலங்கள் தோறும் பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அந்த அடிப்படையில் தேசிய தலைநகர் டெல்லியிலும் கடந்த ஜூலை மாதம் முதலே பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. ஆனால் டெல்லியில் கடந்த மாதம் முதல் நிலவி வரும் காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளை அடைப்பதற்கு அரசு உத்தரவிட்டு இருந்தது. எனினும் பொது தேர்வு எழுதும் CBSE மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து கடந்த வாரத்தில் டெல்லி காற்று தர மேலாண்மை ஆணையம் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கியது. அந்த வகையில் பள்ளிகள் தோறும் 6-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களும் மீண்டும் வழக்கமான வகுப்புகளை தொடங்கியது. தற்போது தேசிய தலைநகரில் உள்ள பல தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சில பள்ளிகள் மட்டும் ஜனவரி 3 முதல் வகுப்புகளை தொடங்க முடிவு செய்துள்ளது.
அதாவது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு பல்வேறு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக இல்லாததால் ஜனவரி 3 முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக சில பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது. இதனிடையில் ஒமிக்ரான் வைரஸ் நிலைமை அனுமதித்தால் வரும் ஜனவரியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் சில பள்ளி நிர்வாகங்கள் குறிப்பிட்டுள்ளது.