லாரியில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை தாசில்தார் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி தாசில்தார் ராஜ்குமார் அலுவலக பணி காரணமாக தனது வாகனத்தில் விருதுநகர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வடமலாபுரம் அருகில் முன்னால் சென்ற லாரியை தாசில்தார் சந்தேகத்தின்படி நிறுத்தி சோதனை மேற்கொண்டார். அந்த சோதனையில் லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தாசில்தாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த பாண்டி மகன் மலைமன்னன் என்பவரை தாசில்தார் ராஜ்குமார் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இவ்வாறு சிவகாசி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து இடைத்தரகர்கள் அரிசியை வாங்கி வெளியூர்களுக்கு கடத்துவதாக ஏற்கனவே தினத்தந்தியில் செய்தி வெளியாகியிருந்தது. அதன்பின் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் 2 இடத்தில் ரேஷன் அரிசி கடத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்து மூட்டைகளை பறிமுதல் செய்தனர். எனவே ரேஷன் கடைகளில் இருந்து அரிசி வாங்குபவர்களை தொடர்ந்து கண்காணித்து கடத்தலை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.