விஷம் வைத்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு ஜெர்மனியில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ரஷ்யாவில் அதிபர் புதின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவரின் ஆட்சிக்கு எதிராக, ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சியான ‘ எதிர்கால ரஷ்யா’ கட்சியின் தலைவர் அலெக்ஸி நவல்னி தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளார். இதற்கு முன்னதாக அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டு தாக்கியதால், அவரின் ஒரு கண் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், புதினை எதிர்த்து போட்டியிட அவருக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் சைபீரியாவின் டோம்ஸ்க் நகரில் இருந்து விமானம் மூலமாக அலெக்ஸி நவல்னி கடந்த வியாழக்கிழமை மாஸ்கோ சென்று கொண்டிருந்தார். அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்க தொடங்கியதால், அவர் சுயநினைவை இழந்துள்ளார். அதன் பின்னர் அவர் சென்று கொண்டிருந்த விமானம் நடுவழியில் ரஷ்யாவின் ஓம்ஸ்க் நகரின் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அவர் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளார். விமானம் புறப்படுவதற்கு முன்னதாக விமான நிலையத்தில் அவர் டீ அருந்துவதாகவும், அதில் வேண்டும் என்றே யாராவது விஷம் கலந்து இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவரை விஷம் வைத்து கொள்வதற்கு முயற்சி செய்ததாகவும், அந்த சதிக்கு பின்னால் புதினின் அரசு இருப்பதாகவும் அவரின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதனால் இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தலைவர்கள் அலெக்ஸின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளோம் என்று உறுதியளித்துள்ளனர். அதுமட்டுமன்றி என்ன நடந்தது என்பது குறித்த விசாரணையை நடத்துவதற்கு ரஷ்யாவை வலியுறுத்தியுள்ளனர். மேலும் அவருக்கு வேண்டிய மருத்துவமனை சிகிச்சைக்கான உதவிகளை செய்வதற்கு ஜெர்மனியை சேர்ந்த தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது. அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் சிறந்ததாகும்.
இருந்தாலும் அலெக்சை சிகிச்சைக்காகஜெர்மனி அனுப்புவதற்கு ரஷ்ய மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மற்றொரு இடத்திற்கு மாற்ற முடியாத அளவிற்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவரின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் இது முற்றிலும் பொய் என்றும், அவரை ஜெர்மனிக்கு அழைத்து செல்வதற்கு அதிபர் புதினின் அரசு தடை போட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த தொண்டு நிறுவனம் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த மருத்துவ உபகரணங்களுடன் கூடிய விமானத்தை ஓம்ஸ்க் நகருக்கு அனுப்பி வைத்துள்ளது.
அந்த விமானத்தில் சென்ற ஜெர்மனி மருத்துவ குழு அலெக்ஸின் உடலை முழு பரிசோதனை செய்து, அவரை ஜெர்மனிக்கு அழைத்து செல்வதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்று ரஷ்ய மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். அதன் பின்னர் அவரை ஏற்றிக்கொண்டு ஜெர்மனி விமானம் ரஷ்யாவில் இருந்து புறப்பட்டுள்ளது. அந்த விமானம் நேற்று பெர்லினில் அரசு மற்றும் ராணுவ விமானங்கள் பயன்படுத்தும் டெகல் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதன் பிறகு அவர் ஆம்புலன்ஸ் மூலமாக சாரிட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த மருத்துவமனையில் அந்நாட்டின் தலைசிறந்த மருத்துவ நிபுணர் குழு அவருக்கு தீவிர சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.