நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கலங்குடி என்னும் இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாக கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். தேர்தல் அலுவலர் ஜான் கேப்ரியல் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் விதிமுறையின் படி வெளிநபர் அனைவரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் ஆனால், அதனை மீறி வசந்தகுமார் சென்றதால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த வசந்தகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அதில், நாங்குநேரியில், நேற்று ஜனநாயகத்தை மீறி காவல்துறையினர் என்னை கைது செய்தனர். என் மீது பொய் வழக்குப் பதிவு செய்து உள்ள காவல்துறை அலுவலர்கள் மீது முதல் தகவல் அறிக்கை கிடைத்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.நான் பணம் கொடுத்ததாக காவல்துறை தரப்பில் கூறுகின்றனர். ஆனால், அந்த பணத்தை அவர்கள் ஏன் கைப்பற்றவில்லை. ஒரு மக்களவை உறுப்பினரை கைது செய்து வழக்குப் பதிவு செய்ய நடத்தை விதிமுறைகள் உள்ளன.
காவல்துறையினர் அந்த விதிமுறைகளை மீறியுள்ளனர். எனவே, காவல்துறையின் இந்தச் செயல் குறித்து சபாநாயகரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.