Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“வயிற்றில் ஏதோ ஊசி போல் இருக்கு” கணவர் கொடுத்த புகார்…. தஞ்சையில் பரபரப்பு….!!

அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் திடீரென இறந்ததால் கணவர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இளங்கார்குடியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் 2-வது முறையாக கர்ப்பமடைந்த லட்சுமி பிரசவத்திற்காக கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதியன்று ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து லட்சுமிக்கு அனுமதிக்கப்பட்ட அன்று இரவே அறுவை சிகிச்சையின் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் லட்சுமியை அவசர வார்டில் வைத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதற்கிடையில் லட்சுமியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று உறவினர்கள் கேட்டபோது, அவருக்கு மஞ்சள் காமாலை இருப்பதால் மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து 17 நாட்களுக்கு பிறகு லட்சுமியை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.

கடந்த 17-ஆம் தேதி லட்சுமி வீட்டிற்கு தாமாகவே வந்த 3 செவிலியர்கள் மீண்டும் லட்சுமியை ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு இருந்து 18-ம் தேதியன்று லட்சுமி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த மருத்துவமணையில் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் இறந்த லட்சுமியின் கணவர் விஜயகுமார் தனது கைக்குழந்தை மற்றும் உறவினர்களுடன் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் இருப்பதாவது “லட்சுமியின் உடலை கொடுப்பதற்கு முன்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர் வலுக்கட்டாயமாக மனைவியின் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் கோர்ட்டுக்கு செல்ல மாட்டோம் என எழுதி வாங்கிக் கொண்டனர். அதன்பிறகு தான் லட்சுமியின் உடலை அவர்கள் எங்களிடம் ஒப்படைத்தனர். ஆகவே தவறான சிகிச்சையால் தான் என் மனைவி லட்சுமி இறந்தார். மேலும் ஸ்கேன் பரிசோதனையில் லட்சுமி வயிற்றில் ஏதோ ஊசி போல் பொருட்கள் இருப்பது தெரிகிறது. எனவே லட்சுமி இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி” அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |