வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்க அறிவுறுத்தி, வழக்கை ஜூலை 2ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வழக்கு விவரம்:
செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயமாக கருதப்படுகிறது. இந்த சரணாலயத்திற்கு 27 வகையான பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் வேடந்தாங்கலின் பரப்பளவை குறைக்க தடை விதிக்க வேண்டும் எனக்கூறி சென்னை சூளைமேட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக சரணாலயத்தின் பரப்பளவை 5 கி.மீ-ல் இருந்து 3 கி.மீ ஆக குறைத்து அறிவிப்பதாக தமிழக சுற்றுசூழல் மற்றும் வனத்துறையின் முதன்மை செயலாளர் மூலமாக விலங்கு நல வாரியத்திற்கு கடந்த மார்ச் 19ம் தேதி அனுப்பியுள்ள தகவலில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனத்திற்காக சட்ட விதிகளுக்கு முரணாக, இயற்கையாக அமைந்துள்ள சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பது தவறான செயலாகும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சம்மந்தப்பட்ட நிறுவனம் தினமும் 1.6 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதால் நிலத்தடி நீர் குறைந்துவிடும். இதன் காரணமாக சுற்றுசூழல் பாதிக்கப்படும் எனக்கூறி, சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு எதிர்மனுதாரராக சேர்ப்பு:
இந்த வழக்கு இன்று நீதிபதிப்பிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பத்திரிகைகள் மூலம் வந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என தமிழக அரசு தெரிவித்திருந்தது. விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள் விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தால் அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும் என தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தையும், தனியார் மருந்து நிறுவனத்தையும் எதிர்மனுதரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.