வீடியோ கேம் விளையாட்டிற்கு அடிமையாகி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பூந்துறை ரோடு பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் முதல் மகனான ஸ்ரீராம் வெள்ளை அடிக்கும் பணிக்கு சென்று வந்தார். கடந்த ஆறு மாதங்களாக ஸ்ரீராம் செல்போனில் அளவுக்கு அதிகமாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மேலும் அதற்கு அடிமையாகி ஸ்ரீராம் இரவு நேரத்திலும் உறங்காமல் நீண்ட நேரமாக விளையாடினார். இதனால் அவரது தந்தை செல்லத்துரை, ஸ்ரீராமை கண்டித்துள்ளார். ஆனால் அதற்கு எந்த பதிலும் கூறாமல் ஸ்ரீராம் தொடர்ந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த அனைவரும் வெளியில் சென்றதால் ஸ்ரீராம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இதனையடுத்து கடைக்கு சென்றிருந்த ஸ்ரீராமின் தம்பி லட்சுமணன் வீட்டிற்கு வந்தபோது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த லட்சுமணன் அருகில் இருப்பவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ஸ்ரீராம் தூக்கிட்டு தொங்குவதை கண்டு லட்சுமணன் அதிர்ச்சியடைந்தார். அதன்பின் அருகில் இருப்பவர்களின் உதவியுடன் ஸ்ரீராமின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்ரீராமை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் விளையாட்டிற்கு அடிமையாகி வாலிபர் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினருக்கு தெரியவந்தது.