கோட்டாறு பகுதியில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் ஹமீத் பாதுஷா. இவர் நாகர்கோவிலில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு இன்று காலையில் ஹமீத் பாதுஷா வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 20 சவரன் தங்கநகைகள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.
கொள்ளைச்சம்பவம் குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் திருட்டு நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் இச்சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் உள்ள சி சி டி வி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் ஹமீத் பாதுஷாவின் வீட்டை நோட்டம் விடும் காட்சி பதிவாகியிருந்தது.
அந்த காட்சியின் அடிப்படையில் குற்றவாளிகளை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் வீட்டில் பீரோ சாவி வைக்கும் இடத்தை நன்றாக தெரிந்த யாரோ ஒரு நபர் தான் இந்த திருட்டில் ஈடுபட்டதாக காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.