வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 15 டன் எடையுள்ள ரேஷன் அரிசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உவரி பகுதியில் அலங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வினோளி தனது வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அங்கு சுமார் 15 டன் எடையுள்ள ரேஷன் அரிசிகள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் மாவட்ட வழங்கல் அதிகாரி குழந்தைசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைசாமி அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வணிக கிடங்கில் ஒப்படைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி திசையன்விளை வட்டார வழங்கல் அலுவலர் கணபதி மற்றும் அதிகாரிகள் வினோளி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 டன் எடையுள்ள அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வள்ளியூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வினோளி நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு இலவசமாக வழங்கும் அரிசியை ரூ.5 – க்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் வினோளி மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.