ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்திய ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த வெங்கடேசன் என்பவர் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பள்ளி நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்தது . இருந்தாலும் அந்த ஆசிரியர் சம்மந்தப்பட்ட மாணவியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவியின் வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் அங்கு சென்று மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் மாணவியிடம் இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.
தற்போது அந்த மாணவி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த மாணவி தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசி பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதால் ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.