பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவர் மீண்டும் கர்ப்பமடைந்தார். இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியான தனலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது.
ஆனால் தனலட்சுமிக்கு அதிகமாக பிரசவவலி ஏற்பட்டதால் வீட்டிலேயே ஆம்புலன்சில் உள்ள மருத்துவ உதவியாளர்கள் மற்றும் பைலட் ஆகியோர் அவருக்கு பிரசவம் பார்த்தனர். இந்த பிரசவத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் தாயும், சேயும் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் கர்ப்பிணிக்கு உரிய நேரத்தில் பிரசவம் பார்த்த ஆம்புலன்சில் உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் பைலட் ஆகியோரை உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.