மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் ,வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் .
மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலத்தை அடுத்துள்ள திருவாலங்காடு அக்ரஹாரம் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் திருக்கோடிக்காவல் கிராமத்தில் இருக்கும் இவருடைய தாயாருக்கு திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது தாயாரை பார்ப்பதற்காக ராஜேந்திரன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு திருக்கோடிக்காவல் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு திரும்பிய அவர் பூட்டிய வீட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் குத்தாலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது மர்ம நபர்கள் சிலர் வீட்டில் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அறையிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த மோதிரம் செயின் நெக்லஸ் உட்பட 34 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் ,ரூபாய் 3 ஆயிரம் பணம் மற்றும் 3 ஏடிஎம் கார்ட் ஆகியவற்றை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தகவலறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.