வீட்டின் சுவர்இடிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கணக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சிவகுமார்- ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் ஹரிகிருஷ்ணன் என்ற குழந்தை உள்ளது. வழக்கம் போல் ஹரிகிருஷ்ணன் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது விழுந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சில நாட்களாக திருச்சியில் பெய்த கனமழையின் காரணமாக உறுதி தன்மையை இழந்த சுவர் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.