வீட்டிற்குள் அரிய வகை விலங்கு புகுந்ததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருமாரம்பாளையம் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் அரிய வகை விலங்கு ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சின்னசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து ஓடி வெளியே வந்தனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் புகுந்த விலங்கை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த விலங்கு அங்கிருந்து நகராமல் வீட்டில் மறைவான பகுதிக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. மேலும் அந்த விலங்கு ஆக்ரோஷமாக இருந்ததால் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் திருப்பூர் தீயணைப்புதுறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் வீட்டில் பதுங்கி இருந்த விலங்கை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டிற்குள் பதுங்கிஇருந்த விலங்கை தீயணைப்பு வீரர்களும் வனத்துறையினரும் பிடித்து கூண்டில் அடைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் வீட்டிற்குள் புகுந்த அரியவகை விலங்கு புனுகு பூனை என தெரிவித்துள்ளனர். மேலும் இது அடர்ந்த காட்டில் வாழும் விலங்கு எப்படி ஊருக்குள் புகுந்தது என்பது தெரியவில்லை என்றும் கூறினர். இந்நிலையில் அடுத்தடுத்து வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.