வீட்டுக்குள் 10 அடி அகலத்திற்கு தரை உள்வாங்கி அதன் வழியாக வெள்ளம் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நந்திவரம் ஊரப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அப்பகுதியில் இருக்கும் வீடுகளை சுற்றி தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் அடையாறு கால்வாய்க்கு அருகில் இருக்கும் குணசேகரன் என்பவரது வீட்டு அறையில் 10 அடி அகலத்திற்கு திடீரென தரை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அந்த பள்ளத்தின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு வெள்ளம் ஓடியது. இதனை பார்த்து குணசேகரனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தரை உள்வாங்கிய சமயத்தில் குணசேகரனின் குடும்பத்தினர் மற்றொரு அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.