லாரியை வழிமறித்து அதிலிருந்த கரும்புகளை யானைகள் தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனச்சரகங்களில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்த வன சாலை வழியாக திண்டுக்கலில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை யானைகள் தன் குட்டிகளுடன் சில நேரங்களில் கடந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் அருகில் யானைகள் தன் குட்டிகளுடன் சாலையில் வந்த 4 லாரிகளை வழிமறித்து அதிலிருந்து கரும்புகளை தின்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதன்படி காரப்பள்ளம் என்ற இடத்தில் கரும்பு லாரியை எதிர்பார்த்து யானைகள் குட்டிகளுடன் சாலையில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது.
அப்போது அவ்வழியாக கரும்புகளை ஏற்றி வந்த லாரியை கண்டதும் யானைகள் வாகனத்தை நோக்கி வேகமாக ஓடியது. இதனால் டிரைவர் என்ன செய்வது என்று தெரியாமல் லாரியை நிறுத்தி விட்டார். இதனையடுத்து யானைகள் லாரியில் இருந்த கரும்புகளை துதிக்கையால் பிடித்து தின்றது. இதனைக் கண்டு அவ்வழியாக சென்றவர்கள் தூரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு யானைகள் கரும்பை வேட்டையாடிய காட்சிகளை தங்களின் போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இவ்வாறு சுமார் 30 நிமிடம் யானைகள் நடுரோட்டில் நின்று கரும்புகளை தின்றுவிட்டு பின் காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பின் சாலையில் நின்ற லாரியை பின்தொடர்ந்து மற்ற வாகனங்கள் ஒவ்வொன்றாகப் சென்றது. இதன் காரணமாக தமிழக-கர்நாடக மாநிலம் இடையே சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.