வாணியம்பாடியில் நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது, மருந்தகங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் இதுவரை 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாணியம்பாடி பகுதியை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியானது. அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் பரவியது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மார்க்கெட்டில் குவிந்தனர்.
மேலும், தனி மனித இடைவெளியை பின்பற்றாமல் காய்கறிகளை வாங்கி சென்றது கொரோனா பரவும் சூழலை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கூட்டத்தை களைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்த நிலையில், வாணியம்பாடி பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இதையடுத்து, வாணியம்பாடியில் நாளை முதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்றார். ஏற்கனவே, ஆம்பூர் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.