கொரோனா பீதியைத் தொடர்ந்து சிக்கன் மற்றும் மட்டன் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதால்,உபியில் உள்ள மக்கள் மாற்றாக பலாக்காய்களை வாங்குவதாக காய்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தொடங்கி 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. இந்தியாவிலும் குடியேறிவிட்ட கொரோனாவால் 60 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா விலங்குகளிடம் இருந்து பரவுவதாக ஏற்பட்ட வதந்தியால் மக்கள் பலர் சிக்கன், மட்டன் வாங்காமல் தவிர்த்து வருகின்றனர். ஆனால் சிக்கன் மட்டனில் இருந்து கொரோனா பரவாது என்பதே உண்மை.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் சிக்கன் மற்றும் மட்டனுக்கு மாற்றாக மக்கள் பலாக்காய்களை வாங்கி செல்கின்றனர். பலாக்காயை வைத்து சமைக்கப்படும் உணவு வகைகளின் ருசி சிக்கன் போலவே சுவையானதாக இருப்பதால் அம்மாநில மக்கள் பலாக்காயை விரும்புகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கிலோ ரூ .50 க்கு விற்கப்பட்ட பலாக்காயின் விலை ரூ 120 ஆக உயர்ந்தது. கொரோனா வைரஸ் கோழியால் தான் பரவுகிறது என்ற வதந்தி கொரோனாவை விட தீயாக பரவியதைத் தொடர்ந்து கோழி விற்பனை கிலோ ரூ .80 ஆக சரிந்துள்ளது.