சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வார்டு வாரியாக வாகனங்களில் கொண்டு வியாபாரிகள் விற்பனை செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம், தாதகப்பட்டி, அம்மாபேட்டை மற்றும் அஸ்தம்பட்டி ஆகிய நான்கு உழவர் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.
இதனால் காய்கறி வாங்க சந்தைக்கு வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் உழவர் சந்தைக்கு யாரும் வர வேண்டாமெனவும் வார்டு வாரியாக விவசாயிகள் வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சூரமங்கலம் மண்டலத்தில் மக்கள் பயனடையும் வகையில் 32 காய்கறி வாகனங்கள், 6 பழம் விற்பனை செய்யும் வாகனங்கள் மற்றும் 2 மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வாகனங்கள் என மொத்தம் 40 நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுப்போன்று ஒவ்வொரு வார்டுகளிலும் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.