திண்டுக்கல்லில் உள்ள வேடசந்தூர் அருகே வாகன சோதனையின்போது ரூ.14 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி காவல்துறை சோதனைச்சாவடியில் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. இந்த வாகன சோதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சாரஸ்வதி தலைமையில் நடைபெற்றுள்ளது. சோதனையின் போது வந்த காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த காரில் சோதனை மேற்கொண்டபோது ரூபாய் 13 லட்சத்து 89 ஆயிரம் எடுத்து செல்வது தெரியவந்தது. இது குறித்து காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் அவர்கள் வசித்து வருவதாக கூறியுள்ளனர். மேலும் அவர் பெயர் அழகர்சாமி என்றும், தொழிலதிபர் என்றும் கூறியுள்ளார். காரில் எடுத்து வரப்பட்ட பணம் குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது, சொந்த ஊரான ராஜபாளையத்தில் வீடு வாங்குவதற்கான பணம் எடுத்துச் செல்வதாக அழகர்சாமி கூறியுள்ளார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனையடுத்து ரூ.13 லட்சத்து 89 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வேடசந்தூர் துணை தாசில்தார் ஆதிகுமார் என்பவரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து அந்த பணம் வேடசந்தூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.