மயிலாடுதுறையில் வாகன சோதனையின் போது வங்கி ஊழியர்களிடம் இருந்து ரூ. 25 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறையில் உள்ள உளுத்துக்குப்பை மெயின் ரோட்டில் துணை தாசில்தார் வைத்தியநாதன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூபாய் 25 லட்சம் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரில் வந்த ரவி, சங்கர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் கிளைக்கு மயிலாடுதுறை கிளையில் இருந்து பணம் கொண்டு செல்வதாக கூறியுள்ளனர். இதையடுத்து ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் மயிலாடுதுறை தாசில்தார் பிரான்ஸ்சுவாவிடம், துணை தாசில்தார் வைத்தியநாதன் பறிமுதல் செய்த பணத்தை ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்தில் வங்கி ஊழியர்கள் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்களை ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் வங்கி ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.