Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

படிச்சு முடிச்சுட்டு வேலை இல்லையா… அரசு உதவி தொகை கிடைக்கும்… உடனே அப்ளை பண்ணுங்க…!!

படித்து முடித்து வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் அரசு வழங்கும் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் படித்த வேலைவாய்ப்பற்றோர்  கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.  படித்த வேலைவாய்ப்பற்றவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாயும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும்  பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு 400 ரூபாயும் பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு 600 ரூபாயும் மேல்நிலை கல்வி கற்றவர்களுக்கு 750 ரூபாயும் பட்டதாரிகளுக்கு 1000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிவடையும். எனவே அதற்குள் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற  https://tnvelaivaaippu.gov.in மற்றும் www.tnvelaivaaippu.gov.in  என்ற இணைய தளங்களில் விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி  பெறாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பதிவு  செய்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு வருடம் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 45 வயதுக்கு மேல் இருக்க கூடாது. மற்றவர்களுக்கு 40 வயதை கடந்திருக்க  கூடாது.

விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்க்கு கீழ் இருக்க வேண்டும்.  விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரியில் நேரடியாக படித்துக் கொண்டிருக்க கூடாது. முற்றிலும் வேலை இல்லாதவராக இருத்தல் வேண்டும் மற்றும் சுயவேலைவாய்ப்பில்  ஈடுபட்டிருக்க கூடாது.மேலும் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முழுமையாக தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும் அல்லது பெற்றோர் பாதுகாவலர் குறைந்தது 15 வருடங்களாவது தமிழ்நாட்டில் குடியிருந்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் எந்த ஒரு நிதி உதவியையும் பெறுபவராக  இருக்க  கூடாது. பொறியியல், மருத்துவம்,விவசாயம் ,கால்நடை அறிவியல் போன்ற தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க கூடாது.

இந்த உதவித்தொகை பெற முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன்  தேசிய மயமாக்கப்பட்ட வங்கி தொடங்கப்பட்ட கணக்கு புத்தகம் ,ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் அனைத்து கல்வி சான்றுகளுடன் வருகிற பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்  மற்றும் தொழில்நுட்ப மையத்தில் நேரில் சென்று விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |