வேலை வழங்கக்கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று இருக்கிறது. இந்த சுங்கச்சாவடியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதியுடன் சுங்கச்சாவடி குத்தகை ஒப்பந்தம் முடிவடைந்தது, பின் குஜராத்தைச் சேர்ந்த புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் பாஸ்டேக் செயல்படுத்தப்பட்டதால் 30 ஊழியர்கள் மட்டும் போதும் என்றும், 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி இல்லை என்றும் திருப்பி அனுப்ப நிர்வாகத்தினர் முயற்சி செய்தனர்.
இதனால் கடந்த 20 நாட்களாக ஊழியர்கள், நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதன்படி தற்போது வாழப்பாடி தாசில்தார் வரதராஜன் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் சரியான உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரமடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் கடந்த 11 ஆண்டுகளாக பணிபுரிந்து எங்களுக்கு திடீரென்று வேலை இல்லை என்று சொல்வது நியாயம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆகவே தங்களுக்கு பணி வழங்க கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் சுங்கச்சாவடியில் இருந்து 800 மீட்டர்ருக்ருக்குள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 11 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 53 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் காவலில் வைத்து இருந்தனர். அப்போது கைது செய்யப்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவை அவர்கள் சாப்பிடவில்லை. அதன்பின் அவர்கள் அனைவரும் மாலை வேளையில் விடுவிக்கப்பட்டனர்.