பிரதமர் மோடியை வெள்ளை மாளிகையில் சந்தித்த ஜோ பைடன் பின் இந்தியாவுடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பை காமெடியாக பேசினார்.
அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் கூட்டமைப்பில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையினில் அவரை வரவேற்ற ஜோ பைடன் இந்தியாவுடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பு குறித்து காமெடியாக பேசியுள்ளார். அப்போது ஜோ பைடன் கூறியதாவது “கடந்த 1972-ஆம் ஆண்டு 29-வது வயதில் நான் முதல் முறையாக செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டபோது, மும்பையிலிருந்து பைடன் என்ற பெயரில் ஒருவர் எனக்கு வாழ்த்து அனுப்பினார். ஆனால் நான் அதை கண்டுகொள்ளாமல் இருந்தபோது இந்தியாவில் 5 பைடன்கள் வசித்து வருவதாக மறுநாள் காலையில் செய்தியாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். இதேபோன்று ஏற்கனவே கிழக்கிந்திய தேயிலை கம்பெனியிலும் ஜார்ஜ் பைடன் என்னும் பெயரில் கேப்டன் ஒருவர் இருந்துள்ளார். அவர் ஒரு அயர்லாந்துகாரர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆகவே எனது இந்திய தொடர்பு குறித்து இன்னும் கண்டுபிடிக்க முடியாததால் இந்த சந்திப்பின் நோக்கமானது அவை அனைத்தையும் எனக்கு கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும்” என ஜோ பைடன் கூறியுள்ளார். இதனை கேட்டு மோடி மற்றும் அங்கு இருந்தவர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். அப்போது பிரதமர் மோடி இந்தியாவில் உங்களுடைய குடும்ப பெயர் இருப்பது குறித்து நீங்கள் ஏற்கனவே என்னிடம் விரிவாக சொல்லி இருக்கிறீர்கள். இதற்காக நான் தீவிரமாக செயல்பட்டு சில ஆவணங்களை உங்களுக்காக கொண்டு வந்திருப்பதாக மோடி கூறினார். இந்த ஆவணங்கள் அனைத்தும் உங்களுக்கு உதவலாம் என்று மோடி கூறியதால் அங்கே இருந்தவர்கள் மேலும் சிரித்து குலுங்கினர்.