வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளலாரை பகுதியில் தீபா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அக்சயகுமார் என்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் மும்பையில் வேலை வாங்கித் தருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்சயகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை நம்பி தீபா தரப்பிலிருந்து ஆறு தவணைகளாக ரூபாய் 1 லட்சத்து 16 ஆயிரம் வரை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பணத்தை வாங்கிக் கொண்ட அவர்கள் வேலை வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனையடுத்து தீபா கொடுத்த பணத்தை திருப்பி கேட்கும்போது அவர்கள் அதனை கொடுக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தீபா வேலூர் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மும்பை அந்தேரியைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் ஜே.கே பானர்ஜி ஆகிய இருவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.