மன உளைச்சலில் ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கனகராஜ் வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மேலாளர் வெங்கடேசன் மற்றும் கோபி ஆகிய 2 பேரும் அவர் சரியாக வேலை செய்யவில்லை என கூறி அவரை மாற்ற ஊழியர்கள் முன்னிலையில் திட்டியதாக தெரியவந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கனகராஜ் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அறிந்த கனகராஜ் உறவினர்கள் அவர் வேலை பார்த்து கொண்டிருந்த நிறுவனத்தின் முன்பாக ஒன்று திரண்டுள்ளனர். அதன்பின் நிறுவன வளாகத்தில் கனகராஜை அவமானப்படுத்தி திட்டிய காரணத்தினால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் அண்ணன் சரண்ராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து கனகராஜ் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.