கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி 48 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஆயிரம்விளக்கு காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, முகநூலில் சுற்றுலா கப்பலில் வேலை செய்ய ஆட்கள் தேவைபடுகிறது என ஒரு விளம்பரத்தை பார்த்தேன். அதில் கை நிறைய சம்பளம் கிடைக்கும் எனவும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தனர். நுங்கம்பாக்கத்தில் செயல்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனம் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசிய போது 1 லட்ச ரூபாய் கொடுத்தால் வேலை வாங்கி தரப்படும் என தெரிவித்தனர். அதன்படி 1 லட்ச ரூபாய் பணத்தை நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டேன். ஆனால் கப்பலில் வேலை வாங்கி தரவில்லை. மேலும் கொடுத்த பணத்தையும் அவர்கள் திரும்பி தரவில்லை. இவ்வாறாக மொத்தம் பலரை ஏமாற்றி 48 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.
எனவே அந்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ராஜா, அவரது உதவியாளர் திவ்ய பாரதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வினோத் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜா மற்றும் திவ்யா பாரதி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.