வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஒருவர் கூலிப்படையினருடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவர் தனது உறவினர்களான பிரவீன், சிவசக்தி, குமார் போன்றோருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருமாறு ஸ்ரீநாத்திடம் 30 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் 3 பேருக்கும் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தராமல் ஸ்ரீநாத் காலம் தாழ்த்தியதால் சம்பந்தப்பட்டவர்கள் பணத்தை திரும்பத் தருமாறு அவரிடம் கேட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில் பீட்டர் தனது உறவினர்களுடன் இணைந்து பணத்தை தருமாறு ஸ்ரீநாத்திடம் மீண்டும் கேட்டுள்ளார்.
அதற்கு ஸ்ரீநாத் கலெக்டர் அலுவலகத்திற்கு வருமாறு பீட்டரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பீட்டர் தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகம் அருகில் சென்றவுடன் அப்பகுதியில் பதுங்கியிருந்த ஸ்ரீநாத் கூலிப்படையினருடன் இணைந்து துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ரீநாத் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ராஜ்குமார், ராஜேஷ் மற்றும் அரசு ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த தோட்டாக்கள், துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.