ரயில்வே வேலை வாங்கித்தருவதாக பெண்ணிடம் பண மோசடி செய்த 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் காமராஜர் சாலையில் ரெமி கிளார்சன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் படித்து விட்டு வேலை தேடி வந்த நிலையில் தனது தாயாரிடம் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த பஷீர் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் எனது தாயாரிடம் உங்கள் மகனுக்கு ரயில்வே பணி வாங்கி தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் பறக்கையை சேர்ந்த ராஜ்குமார் என்ற நலம்குமாரை அ.தி.மு.க. பிரமுகர் என்றும், அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய முதலமைச்சரின் நேர்முக உதவியாளராக வேலை பார்த்து வருவதாகவும் கூறி என் தாயாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து ரயில்வேயில் வேலை வாங்கித் தர 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று பஷீர் கேட்டதால் அதை நம்பி என் தாயார் 10 லட்சத்துக்கான காசோலையை கொடுத்துள்ளார்.
மேலும் பல்வேறு தவணைகளில் வங்கி கணக்கின் மூலம் மொத்தம் 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதன்பின் நேர்முகத்தேர்வு இருப்பதாக கூறி கடிதத்தை அவர்கள் தந்தனர். அதுகுறித்து விசாரித்த போது அது போலி நேர்முகத் தேர்வுக்கான கடிதம் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் பணத்தை திருப்பி கேட்டோம். ஆனால் பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெமி கிளார்சன் மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். இதுதொடர்பாக பஷீர், ராஜகுமார் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு இந்த 2 நபர்கள் மீதும் ஏற்கனவே மோசடி வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.