வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் கீழே தெருவில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக இருக்கின்றார். இவர் முகநூலில் சரோன் மோர்கன் என்பவருடன் நண்பராக பழகி வந்தார். இதில் மோர்கன் இங்கிலாந்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜீவா வேலை இல்லாமல் இருப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் மோர்கன், ஜீவாவுக்கு இங்கிலாந்தில் வேலை வாங்கி தருவதாக ஆறுதல் வார்த்தைகளை கூறியுள்ளார். அதன்பின் மோர்கன் விசா பெறுவதற்காக 10 லட்சத்து 50 ஆயிரத்து 500 ரூபாய் தேவை இருக்கிறது என்றும், இதனை தனது நண்பர்களான சாஷித் அலி, ஆரிப்கான், அமித்குமார், ராஜா பாபு போன்றோரது வங்கி கணக்கில் போட வேண்டும் என்றும் ஜீவாவிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி ஜீவா பணத்தை 4 பேரின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் ஜீவாவுக்கு வேலை கிடைக்காமல் மோர்கனுக்கு தொடர்புகொண்டபோது அவர் எடுக்கவில்லை. இதனால் தான் ஏமாந்ததை உணர்ந்த ஜீவா மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.