வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபர்களிடம் 2 1\4 லட்சத்தை மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அழகு நாச்சியார் புரம் பகுதியில் அய்யனுராஜ், கணேசன் என்ற நண்பர்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடம் நெல்லை மாவட்டத்திலுள்ள பர்கிட் மாநகர் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் அருணாசலம் ஆகிய 2 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய அய்யனுராஜும், கணேசனும் அவர்களிடம் 2 1\4 லட்சத்தை கொடுத்துள்ளனர். ஆனால் அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கிய மணிகண்டனும், அருணாச்சலமும் அவர்களுக்கு வேலை வாங்கி தரவில்லை.
மேலும் அவர்களிடம் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த அய்யனுராஜ், கணேசன் ஆகிய 2 பேரும் இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டன், அருணாச்சலம் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.