தலைமைச் செயலகத்தில் பணியில் இருப்பதாக கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக வாலிபரிடம் ரூ.16 1\2 லட்சம் மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சிந்தாகவுண்டம்பாளையம் பகுதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் அங்கமுத்துவிற்கு ஈரோட்டில் வசிக்கும் குருதேவ் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் குருதேவ் தன்னுடைய கல்லூரி நண்பர் என ராஜேஷ்குமார் என்பவரை அங்கமுத்துவுக்கு அறிமுகபடுத்தி வைத்துள்ளார். அப்போது அங்கமுத்துவிடம் ராஜேஷ்குமார் ‘நான் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்’ எனவும், மேலும் அவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பி அங்கமுத்து கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ந் தேதி வரை ராஜேஷ்குமாரின் வங்கி கணக்கிற்கு பல தவணைகளில் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் ராஜேஷ்குமார் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் இருந்துள்ளார். இதனால் அங்கமுத்து சென்னை தலைமை செயலகம் சென்று ராஜேஷ்குமார் என்பவரை கேட்ட போது அந்த அலுவலகத்தில் அவர் பணிபுரிவது இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ராஜேஷ்குமார் மற்றும் குருதேவ் ஆகிய இருவருக்கும் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் அவர்கள் அங்கமுத்துவிடம் பல காரணங்கள் கூறி சமாளித்து வந்துள்ளனர். இதனையடுத்து அங்கமுத்துவிடம் அவர்கள் இனிமேல் எங்களுக்கு போன் செய்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த அங்கமுத்து இதுகுறித்து அந்தியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மோசடி செய்த ராஜேஷ்குமார் மற்றும் குருதேவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 2 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.